ஒடிசாவில் பஸ் கவிழ்ந்து விபத்து 21 பேர் பலி

பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்த சம்பவத்தில் 21 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில் உள்ள அத்மாலிக் என்ற இடத்திலிருந்து பவுத் மாவட்டத்திற்கு பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் பவுத் மாவட்டத்தை நெருங்கும் நிலையில், பாலத்தில் வந்து கொண்டிருந்த போது, பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், டிரைவர் செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது எதிரே சிறுவன் ஒருவன் திடீரென வந்தான். இதனையடுத்து சிறுவன் மீது மோதாமல் இருக்க பஸ்சை திடீரென இடதுபுறம் திருப்பியதை தொடர்ந்து, பஸ் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது எனக்கூறினார்.

இந்த விபத்தில், 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் மருத்துவமனையில் பலியானார்கள். 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரகளில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் கூறினர்.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கலெக்டர், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், பஸ் முற்றிலும் சேதமடைந்தது. அனைத்து பயணிகளும் அங்கிருந்து மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனககூறினார்.

இந்த விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தனது மனதை காயப்படுத்தியுள்ளதாகவும், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்காக தான் வேண்டிக்கொள்வதாக பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.