2007 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு என் வாழ்க்கையில் பல மாற்றங்கள்: டோனி

2007 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு எழுந்த விமர்சனங்கள், எனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனியின் வாழ்க்கை வரலாற்றை “எம்.எஸ்.தோனி-தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் இயக்குநர் நீரஜ் பாண்டே படமாக்கியுள்ளார். படத்தின் பெரும்பாலான பகுதிகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படம் வரும் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தப் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. அதில் தனது மனைவியுடன் கலந்துகொண்ட தோனி, மேலும் கூறியதாவது: எனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க விரும்புவதாக பாண்டே கூறினார். அப்போது இந்தப் படம் எனது புகழைப் பாடுவதாக இருக்கக்கூடாது. ஒரு தொழில்முறை விளையாட்டு வீரரின் வாழ்க்கைப் பயணத்தை சித்தரிப்பதாக இருக்க வேண்டும் என்று பாண்டேவிடம் கூறினேன்.
நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே நினைத்து வாழக்கூடிய ஒரு நபராக இருப்பதால் எனது கடந்த காலத்தை மீண்டும் நினைவுகூர்ந்து அதுபற்றிய விஷயங்களை இயக்குநரிடம் கூறுவது கடினமாக இருந்தது.

இந்தப் படத்தை எடிட் செய்வதற்கு முன்பு பார்த்தபோது, நான் படித்த பள்ளி, விளையாடிய மைதானம் என அனைத்து பசுமையான விஷயங்களையும் உணர முடிந்தது.

கடந்த காலத்துக்கே மீண்டும் சென்றது மிக இனிமையாக இருந்தது. நான் எனது பெற்றோரிடம் ஒருபோதும் கிரிக்கெட்டை பற்றி பேசியதில்லை. ஆனால் அவர்கள் என்னைப் பற்றி என்னை நினைத்தார்கள் என்ற விஷயங்களை இந்தப் படத்தில் காட்சிகளாகப் பார்த்தது இனிமையாக இருந்தது என்றார்.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு இந்த உலகம் உங்களைப் பற்றி என்ன நினைக்கும் என்று நினைத்து கவலைப்பட்டீர்களா என்று தோனியிடம் கேட்டபோது, “இந்தப் படத்தைப் பற்றி ஆரம்பத்தில் இயக்குநர் சொன்னபோது, சற்று கவலையடைந்தேன். ஆனால் கதையை சொல்ல ஆரம்பித்த பிறகு கவலையை மறந்தேன்’ என்றார்.

2007 உலகக் கோப்பை: கிரிக்கெட் வாழ்க்கை குறித்துப் பேசிய தோனி, “2007 உலகக் கோப்பை போட்டியில் தொடக்க சுற்றோடு வெளியேறியதால் என் மீதும், அணி மீதும் எழுந்த கடுமையான விமர்சனம், எனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சில சமயங்களில் தோல்வியைப் பற்றி நாங்கள் பெரிதாக கவலைப்படவில்லை என ரசிகர்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு விளையாட்டு வீரர் எதையும் தாங்கும் வலிமையானவராக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படாதவராக இருக்க வேண்டும் என கருதக்கூடியவன் நான்.

2007 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கினோம். அப்போது ஏராளமான ஊடகங்கள் அங்கு குவிந்திருந்தன. நாங்கள் அனைவரும் போலீஸ் வாகனத்தில் ஏறி சென்றோம். நான், சேவாக் அருகே அமர்ந்திருந்தேன். பகல் முடிந்து, இரவு தொடங்குகிற நேரம் அது. குறுகலான சாலையில் 60, 70 கி.மீ. வேகத்தில் எங்கள் வாகனம் செல்கிறது. அப்போது ஊடகத்தினர் தங்கள் வாகனங்களின் மீது பிரமாண்ட விளக்குகளையும், கேமராக்களையும் வைத்துக்கொண்டு எங்களை துரத்தினர். அப்போது நாங்கள் ஏதோ பெரிய குற்றத்தைச் செய்துவிட்டது போன்றும், ஒரு கொலையாளி அல்லது பயங்கரவாதியைப் போல் துரத்தப்படுவது போன்றும் உணர்ந்தோம்.

சிறிது நேர பயணத்துக்குப் பிறகு காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டோம். 20 நிமிடங்களுக்குப் பிறகு எங்களுடைய காரில் புறப்பட்டுச் சென்றோம். அந்த சம்பவம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுதான் என்னை சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த மனிதராகவும் மாற்றியது’ என்றார்.