பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினர் முகாம்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் உயிரிழந்தார். இரு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பாகிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்து, காஷ்மீரிலும், நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டினர். இதுகுறித்து ராணுவ உளவுப்பிரிவுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன.

அந்த தகவலைப்பெற்ற மத்திய அரசு, ராணுவம் நடவடிக்கை எடுத்து, அந்த பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் ராணுவ அதிரடிப்பிரிவு கமாண்டோக்கள் அங்கு சென்று, 28–ந் தேதி நள்ளிரவு தொடங்கி 29–ந் தேதி அதிகாலை வரை பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை அதிரடியாக நடத்தினர். இதில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதத்தில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு முகமைகள் உத்தரவிடலாம் என உளவுத்துறை எச்சரித்தது. இதனையடுத்து எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாரமுல்லாவில் நேற்று இரவு பெருமளவு ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் மற்றும் அதன் அருகே அமைந்திருந்த ராஷ்டிரிய ரைபிள் படை முகாமில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.

இருதரப்பு சண்டையின் போது பயங்கரவாதிகள் இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். சண்டையில் காயம் அடைந்த இரண்டு ராணுவ வீரர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பாரமுல்லாவில் நிலையானது இப்போது கட்டுக்குள் உள்ளது என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அப்பகுதியில் தற்கொலைப் படை பயங்கரவாதிகளை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

உயிரிழந்த ராணுவ வீரர் நிதின் என்றும் காயம் அடைந்த ராணுவ வீரர் புல்விந்தர் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இருவரும் எல்லைப் பாதுகாப்பு படையினர் 40-வது பாட்டலியன் படைப்பிரிவை சேர்ந்தவர்கள். இவ்விவகாரம் தொடர்பாக நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படைக்கு தேவையான உத்தரவுகள் கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ராஜ்நாத் சிங், எல்லைப் பாதுகாப்பு படை ஜெனரல் கே கே சர்மாவிடம் பேசினார்.

அப்போது காயம் அடைந்த ராணுவ வீரருக்கு தேவையான சிகிச்சையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். கடந்த வாரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நடந்த முதல் பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.