பரங்கிமலை – கோயம்பேடு மெட்ரோ ரயில் திறப்பு 15 நிமிடத்தில் பயணம்!

பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் நேற்று திறக்கப்பட்டு அங்கிருந்து ரெயில்கள் இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலைக்கு 15 நிமிடத்தில் பயணம் செய்யலாம். சென்னையில் வண்ணாரப்பேட்டை – விமானநிலையம் மற்றும் சென்ட்ரல் – பரங்கிமலை என இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கியது. அதில் முதல்கட்டமாக 2015 ஜூன் 29ம் தேதி மேம்பால வழித்தடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக சின்னமலை முதல் விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 21ம் தேதி துவக்கி வைத்தார். கோயம்பேடு – பரங்கிமலை வரையிலான வழித்தடத்தில் பணிகள் முழுமையாக முடியாமல், ஆலந்தூர் வரையே ரயில் இயக்கப்பட்டது. அதன்பின்னர், அந்த பகுதியில் சோதனை முறையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு ஆணையர் ஆலந்தூர்-பரங்கிமலை இடையே ரெயில்கள் இயக்கலாம் என்று அனுமதி வழங்கினார்.

அதன் அடிப்படையில், நேற்று பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் திறந்து வைக்கப்பட்டு, அங்கிருந்து மெட்ரோ ரெயில் சேவை உள்ள பிற பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டன. பரங்கிமலையில் இருந்து கோயம்பேடுக்கு 15 நிமிடத்தில் இனி தடை இல்லாமல் பயணம் செய்ய முடியும். பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் பல அடுக்கு வசதி கொண்ட ஒருங்கிணைந்த சேவையை உள்ளடக்கியதாகும்.

அதாவது, மெட்ரோ ரெயில் சேவை மட்டும் அல்லாது, பறக்கும் ரெயில் சேவை(வேளச்சேரி-பரங்கிமலை), அருகில் மின்சார ரெயில் சேவையும் என 3 விதமான சேவைகளை இந்த ரெயில் நிலையத்தில் இருந்து பெற முடியும். இதில் பறக்கும் ரெயில் சேவை பணிகள் சில காரணங்களால் தடைப்பட்டு இருக்கிறது. அதுவும் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கட்டணம் ரூ.40

கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலைக்கு ரூ.40 கட்டணத்தில் இந்த பயண அனுபவத்தை பெற முடிகிறது. ஒவ்வொரு நாளும் பரங்கிமலையில் இருந்து காலை 6 மணிக்கு முதல் ரெயில் புறப்படுகிறது. அதேபோல், கடைசி ரெயில் இரவு 10.20 மணி ஆகும். இதுகுறித்து பரங்கிமலை பகுதியை சேர்ந்த ஆர்த்தி (வயது 36) என்ற பெண் பயணி கூறும்போது, ‘நான் அரும்பாக்கத்தில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன். தினமும் வேலைக்கு செல்வதற்காக ஆலந்தூர் சென்று அங்கிருந்து மெட்ரோ ரெயில் மூலம் அரும்பாக்கம் சென்று வந்தேன்.

தற்போது பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுவதால், நான் இப்போது இங்கு இருந்தே பயணத்தை தொடருகிறேன். எனக்கு நேரமும், செலவும் மிச்சம் ஆகிறது’ என்றார். அறிவிப்பு இல்லாததால் ஆள் இல்லை:  மெட்ரோ ரயில் சேவை துவங்கும்போது தமிழக அரசு சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படுவதுடன் முறைப்படி முன்னறிவிப்பு வெளியிடப்படும். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு ரயில் சேவையை தொடங்கி வைப்பார்கள். அதன்படி, கடந்த 21ம் தேதி சின்னமலை-விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், நேற்று மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது தொடர்பாக எந்தவித அறிவிப்புகள் எதுவும் வெளியிடாததால் ரயில் பயணிகள் இல்லாமல் காலியாக இருக்கிறது.