100 கோடி சொத்தைக் கொடுத்து துறவறம் செல்லும் ஜெயின் தம்பதிகள்

100 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், மூன்று வயது குழந்தையையும் கைவிட்டு துறவறம் மேற்கொள்ள தம்பதி ஒருவர் முடிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோர்கர் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க கட்சி பிரமுகரின் மகள் அனாமிகா (34). இவருக்கும் சுமித் ரத்தோர் (35) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஜெயின் துறவிகளாக மாறுவதற்கு முடிவு செய்துள்ளனர். வரும் செப்டம்பர் 23ஆம் தேதியன்று குஜராத் மாநிலம், சூரத்தில் சுதாமார்கி ஜெயின் ஆச்சார்யா ராம்லால் மகராஜ் முன்பு முதல்கட்டமாக தீக்ஷை பெறுகின்றனர். இது குறித்து அனாமிகாவின் தந்தை கூறுகையில், மகள் மற்றும் மருமகனின் துறவறம் முடிவை தடுக்க முயன்றும் அதை அவர்கள் ஏற்கவில்லை. தங்களின் ஆத்ம திருப்தி மற்றும் உள்ளுணர்வு உந்துதலால் இதை செய்ய அவர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம், குஜராத் மாநில 12ஆம் வகுப்பு தேர்வில் 99.9 சதவீத மதிப்பெண் பெற்று இருந்த 19 வயது மாணவன் வர்ஷில் ஷா ஜெயின் துறவியாக மாறிய சம்பவம் தேசிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.