டிரைவரின் மனைவி வங்கி பணம் ரூ.1.37 கோடி கடத்தியதாக கைது

வங்கிகளின் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் போது ரூ.1.37 கோடியுடன் வேனை கடத்திச் சென்ற பெங்களூர் தனியார் நிறுவன டிரைவரின் மனைவி கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று அதனை ஏ.டி.எம்.களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் டிரைவராக பணியாற்றி வந்த டுமினிக் என்பவர், கடந்த 23 ஆம் தேதி ஏடிஎம் களில் பணத்தை நிரப்பும் போது, ரூ.1.37 கோடியுடன் வேனை கடத்திச் சென்றார்.

இதையடுத்து டுமினிக்கை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், வேன் கடத்தப்பட்ட மறுநாள், அதிகாலை கடத்தப்பட்ட வேன் வசந்த் நகர் அருகே நின்றது. அதில் ரூ.45 லட்சம் பணமும், காவலாளியின் ஒரு துப்பாக்கியும் இருந்தது.

டுமினிக் தனது குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்ட நிலையில், தனிப்படை போலீசார் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பானசவாடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லிங்கராஜபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு டுமினிக்கின் மனைவி எவ்லின் வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் எவ்லினை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்த பணப்பையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ரூ.79 லட்சத்து 8 ஆயிரம் இருந்தது. அவை அனைத்தும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். எவ்லினுடன் அவரது மகனும் இருந்ததால் அவனை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடும்படி போலீசார் கூறியதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.