ரூ.7,850 கோடிக்கு வோடபோன், ஐடியா டவர்களை வாங்கும் ஏடிசி

தொலைத் தொடர்பு துறையில் இணைப்பு நடவடிக்கைகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வோடபோன், ஐடியா நிறுவனங்களின் டவர்களை ரூ.7,850 கோடிக்கு வாங்க ஏடிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தொலைத் தொடர்பு டவர்களை நிர்வகிக்கும் துறையிலும் 3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே நிலைத்திருக்கும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை அமெரிக்கன் டவர் கார்ப்பரேஷன் ( ஏடிசி) நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில், வோடபோன் இந்தியா,ஐடியா நிறுவனங்களின் 20,135 டவர்களை ரூ.7,850 கோடிக்கு கையகப்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இந்த இணைப்பு 2018-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் முடிவுக்கு வரும் என்றும் ஏடிசி எதிர்பார்க்கிறது. இந்த இணைப்புக்குப் பின்னர் 80,000 டவர்களுடன் இந்த துறையில் மிகப் பெரிய நிறுவனங்களில் இரண்டாவது நிறுவனமாக ஏடிசி இருக்கும். தற்போதைய நிலையில் இண்டஸ் டவர்ஸ் 1,23,073 டவர்களை நிர்வகித்து முதலிடத்தில் உள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனமும் தனது டவர் தொழிலை விற்பதற்கான முடிவில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு பின்னர் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது டவர் துறையிலிருந்து விலகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஏடிசி நிறுவனத்தின் ஆசிய பிராந்திய செயல் துணைத் தலைவர் அமித் சர்மா, தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் டவர் தொழிலிலிருந்து விலகுவது சிறப்பான போக்கு. உலக அளவில் இந்த சூழல் இருந்தாலும் இந்திய நிறுவனங்கள் சற்று தாமதமாக இதை புரிந்து கொண்டுள்ளன.தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு முக்கிய தேவையாக இருப்பது தங்களது வாடிக்கையாளர்களுக்கான முதன்மை சேவைதான். டவர்களை நிர்வகிப்பது நிறுவனங்களுக்கு இடைப்பட்ட சேவை என்று கூறினார்.

“துணைத் தொழில்களை விற்பது என்கிற முடிவை ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன் பகுதியாகவே டவர் தொழில் விற்கப்படுகிறது’’ என்று ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிமான்சு கபானியா கூறினார். மேலும் இதன் மூலம் தங்களது நிதி நிலை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.