முட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்

முட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்

நாமக்கல்: முட்டை உற்பத்தி செலவை விட, விற்பனை விலை அதிகமாக இருப்பதால், நாமக்கல் பண்ணையாளர்களுக்கு தினமும் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கிறது. நாமக்கல் மண்டலத்தில், சுமார் 1000 கோழிப்பண்ணைகள் உள்ளன. 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் 18வது வாரம் முதல் முட்டையிடும். 72வது வாரத்தில் அந்த கோழிகளை பண்ணையாளர்கள் கிழட்டு கோழி என பிடித்து, கறிக்கு விற்பனை செய்கின்றனர். கோழிகள் தங்களது வாழ்நாளில் 5 வித அளவுகளில் முட்டைகளை இடுகிறது. அந்த முட்டைகளின் எடையை பொறுத்து, பண்ணையாளர்கள் அதை மீடியம், புல்லட், எக்ஸ்போர்ட்ஸ், நார்மல், பெரியமுட்டை என 5 வகையாக பிரிக்கின்றனர். இந்த முட்டைகள் 38 கிராம் முதல் 57 கிராம் வரை எடை இருக்கும். இதில் பெரிய முட்டைக்கு மட்டும் தான், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு வாரத்துக்கு 3 முறை விலை நிர்ணயம் செய்கிறது

இந்த விலை நிர்ணயக்குழுவில் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் இடம் பெற்றுள்ளனர். வாரத்துக்கு 3 நாளும் கூட்டம் போட்டு, முட்டை விலை நிர்ணயம் செய்த நிலை மாறி, தற்போது வாட்ஸ்அப், டெலிகான்பரன்ஸ் மூலம் தான், பெரும்பாலான நாட்களில் முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில், மதியம் 12.15 மணிக்கு நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இருந்து பண்ணையாளர்கள், வியாபாரிகள் என அனைவருக்கும் வாட்ஸ்அப், இமெயில் மூலம் முட்டை விலை அனுப்பப்படுகிறது. தற்போது நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 474 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டையின் உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பால் விலை உயர்வு என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் என்.இசி.சி நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 5 காசு அதிகமாக கொடுத்து தான், முட்டையை வாங்க வேண்டியுள்ளதாக முட்டை வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போது ஒரு முட்டையின் உற்பத்தி செலவு ரூ.3.10 முதல் ரூ.3.25 வரை உள்ளது. ஆனால் விற்பனை விலை ரூ.4.75 முதல் ரூ.4.80 வரை உள்ளதால், ஒரு முட்டை விற்பனையில் பண்ணையாளர்களுக்கு ரூ.1.50 வரை லாபம் கிடைக்கிறது. நாமக்கல் மண்டலத்தில் தினமும் 3 கோடி முட்டைகள், பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது. இதன் மூலம் முட்டை விற்பனையில், பண்ணையாளர்களுக்கு தினமும் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கிறது. இதே போல, வியாபாரிகளுக்கும் கடந்த காலத்தை விட அதிக லாபம் கிடைக்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் தற்போது ஒரு முட்டை ரூ.5.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.