நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கணிப்பு

நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கணிப்பு

பொருளாதார மந்த நிலை 2013-14-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் அந்த மந்த நிலை தற்போது முடிவடைந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் 6.7 முதல் 7 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் 7.5 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்

2016-17-ம் நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்ததால், பொருளாதாரத்தில் பாதிப்பு உருவானது. அதன் தொடர்ச்சியாக நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக குறைந்தது. இந்த நிலைமையில் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி விகிதம் 7% வரை இருக்கும் என ராஜீவ் குமார் கணித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நடப்பு நிதி ஆண்டை விட அடுத்த நிதி ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த வளர்ச்சி நீடித்து இருக்கும். நாட்டின் பொருளாதாரம் 2007-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சிறப்பாக இருந்தது. அதன் பிறகு 2013-ம் ஆண்டு மந்த நிலைமை உருவானது. 2007-ம் ஆண்டு முதல் வளர்ச்சி இருப்பதற்கான காரணம் அப்போது பல கட்டுமானத் திட்டங்களுக்கு கடன் கொடுக்கப்பட்டது. தவிர இந்த கடன்கள் சரியாக ஆராயாமல் வழங்கப்பட்டன. 2013-ம் ஆண்டு முதல் இந்த கடன்கள், வாராக் கடன்களாக மாறின. அதனை தொடர்ந்து இறங்குமுகம் தொடங்கியது. என்னுடைய கணிப்பு படி கடந்த ஜூலையுடன் இந்த சரிவு முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன் என்று ராஜீவ் குமார் கூறினார்.