தீபாவளிக்கு ஊருக்குப் போக சிறப்பு பேருந்துகள்!

தீபாவளி என்றாலே… பிறந்த ஊர் தேடி பறப்பதில் இருக்கும் சுகமே சுகம் பலருக்கும். குறிப்பிட்ட அளவிலான மக்கள் ரயில் மற்றும் சொந்த வாகனங்களில் பயணிக்க… பெரும்பாலானவர்களின் ஒரே தேர்வு அல்லது ஒரே வழி… பேருந்துகள்தான். ஆனால், பெருநகரங்களில் இருந்து பேருந்துகளைப் பிடித்து ஊருக்குப் போய்ச் சேர்வதற்குள் போதுமடா சாமி என்பதுதான் பல ஆண்டுகளாகவே நிதர்சனம்.

காரணம்… பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் காரணமாக ஏற்படும் நெரிசலே. குறிப்பாக சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படக்கூடிய பேருந்தில் ஏறவேண்டும் என்றால், மதியம் மூன்று மணிக்கே போய்ச் சேர்ந்தால்தான் உண்டு. அதேசமயம், அந்த பேருந்து சரியாக 6 மணிக்குப் புறப்படுமா என்றால்… பெரும்பாலும் இல்லை என்பதே பதில்.

அது புறப்படும்போதுதான் நிச்சயம். இந்தப் பிரச்னை அரசுப் பேருந்துகளுக்கு மட்டுமல்ல… கோயம்பேட்டிலிருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கும் பொருந்தும். இதில் தனியார் பேருந்துகளின் கட்டண கொள்ளை சொல்லி மாளாது. சரி, என்ன இருந்தாலும் ஊர்ப்போய்ச் சேர்ந்துதானே ஆகவேண்டும்!

இதில் இந்த ஆண்டு சென்னையைப் பொறுத்தவரை ஒரு புது ஏற்பாட்டைச் செய்துள்ளனர். அதாவது பேருந்துகள் இயக்கப்படும் ஊர்களைப் பொறுத்து கோயம்பேடு, அண்ணா நகர், பூந்தமல்லி, தாம்பரம் (சானிடோரியம்) மற்றும் ஊரப்பாக்கம் என ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பேருந்து நிலையங்களுக்கு இடையே மாநகர பேருந்துகளையும் இயக்கத் திட்டமிட்டுள்ளனர். அக்டோபர் 26 முதல் இந்த ஏற்பாடு அமலுக்கு வருகிறது.