குஜராத் தேர்தலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பப்பு தேர்தல் ஆணையம் அதிரடி

குஜராத் சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, ஆளும் பி.ஜே.பி-யும், காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா தீவிரமாக உள்ளார். மத்திய அமைச்சர்கள் பலரும் குஜராத்தில் முகாமிட்டு, பி.ஜே.பி. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அண்மையில் குஜராத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பி.ஜே.பி வெற்றிபெறும் என்று தகவல் வெளியான போதிலும், காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திளால், பி.ஜே.பி. ரொம்பவே கலக்கம் அடைந்துள்ளது.

குஜராத்தைப் பொறுத்தவரை டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்டத் தேர்தல் நடைபெறம் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்தச் சூழலில், ‘பி.ஜே.பி ‘பப்பு’ என்ற வார்த்தையை பிரசாரத்தின்போது பயன்படுத்தக் கூடாது’ என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை விமர்சிக்கும் வகையில், தேர்தல் பிரசாரத்தின்போது, ‘பப்பு’ என்ற சொல்லை பி.ஜே.பி. உபயோகித்து வந்தது. இது எந்தவொரு தனிநபரையோ அல்லது அரசியல் கட்சியையோ குறிக்கும் சொல் அல்ல என்று பி.ஜே.பி. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்றும், அது தரம்தாழ்ந்த வார்த்தை என்றும் தெரிவித்து, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பி.ஜே.பி-யை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.