கருணாநிதியை பார்த்ததும் எழுதுவதை நிறுத்தி மகிழ்ச்சியில் சிரித்ததோ மெழுகு சிலை!

கருணாநிதியை பார்த்ததும் எழுதுவதை நிறுத்தி மகிழ்ச்சியில் சிரித்ததோ மெழுகு சிலை!

சென்னை:

முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட திமுக தலைவர் கருணாநிதி நேற்று கோடம்பாக்கம், முரசொலி அலுவலகம் வந்திருந்தார்.
உடல்நலக்குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, ஓராண்டு கழித்து பொது வெளிக்கு வந்ததை பார்த்த திமுக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
தமிழக அரசியலின் இருபெரும் ஆளுமைகளான, கருணாநிதியின் ஓய்வு மற்றும் ஜெயலலிதாவின் மறைவால், அரசியலில், வெற்றிடம் உருவானதாக கூறப்பட்ட நிலையில், கருணாநிதியின் வருகையால் அரசியல் களமும் சூடு பிடித்துள்ளது.

மெழுகு சிலை

முரசொலி அரங்கில் கருணாநிதியின் மெழுகு சிலை, கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நேற்று கருணாநிதி வருகை தந்தபோது அதையும் பார்வையி்டடார். அப்போது ஸ்டாலின் அந்த மெழுகு சிலை குறித்த விவரங்களை கருணாநிதி காதருகே சென்று, எடுத்துரைத்தார்.

கருணாநிதியை பார்த்து சிரிப்பு

கருணாநிதியின் மெழுகு சிலை, காகிதத்தில் எதையோ எழுதியபடியும், சிரித்தபடியுமான தோற்றத்தோடு உருவாக்கப்பட்டிருந்தது. கருணாநிதி அதன் அருகே சென்றபோது, அந்த மெழுகு சிலை அவரை பார்த்துதான் எழுதுவதை நிறுத்திவிட்டு சிரிப்பதை போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது என்று நெகிழ்கிறார்கள் நெட்டிசன்கள்.

சக்கர நாற்காலியில் வருகை

கருணாநிதியின் கால்களுக்கு அவரது உடல் எடையை தாங்கும் சக்தி குறைந்ததன் காரணமாக, முதலில் உதவியாளர்கள் துணையோடு நடந்துகொண்டிருந்தார். பிறகு, சக்கர நாற்காலியில் அமரத் தொடங்கினார். முரசொலி அலுவலகத்திற்கும் நேற்று சக்கர நாற்காலியில் அவர் வருகை தந்தார்.

ஜெயலலிதா படம்

முரசொலி அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள, கண்காட்சியில் சட்டசபை காட்சிகள் உள்ளன. அதில் பச்சை நிற சேலையில், ஜெயலலிதா அமர்ந்திருக்கும் காட்சியும் வடிக்கப்பட்டுள்ளது. அதையும் கருணாநிதி பார்த்தார். சிவாஜி கணேசன் சிலையில் பொறிக்கப்பட்ட கருணாநிதி பெயரை அதிமுக அரசு நீக்கிய நிலையில், முரசொலி அலுவலகத்தில் ஜெயலலிதா காட்சி இடம் பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் புகழ்ந்தனர்.