இரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி

இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளின் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பது அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வு என்றும் இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் முகநூலில் விளக்கம் அளித்துள்ளார். மைத்ரேயன் தொடர் பதிவால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மைத்ரேயனின் இந்த முகநூல் பதிவு குறித்து, மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், மைத்ரேயனின் முகநூல் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பது உறுதி. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இரட்டை இலை சின்னத்துடனேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார்.

தம்பிதுரையின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், மற்றொரு கருத்தை தனது முகநூல் பக்கத்தில் மைத்ரேயன் பதிவிட்டுள்ளார். அதில், ” நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்று தான் பதிவிட்டிருந்த எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான அதிமுக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் தான் எதிரொலித்துள்ளேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்ற மைத்ரேயன் கருத்துக்கு, இரு அணிகளும் மனதாலும், உள்ளத்தாலும் இணைந்தே செயல்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் புகாருக்கு அதே அணியை சேர்ந்த பொன்னையன் பதில் அளித்திருப்பது அதிமுகவில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.