இந்திய ஆக்கி அணி வலுவானது இல்லை: பாகிஸ்தான் பயிற்சியாளர்

இந்திய ஆக்கி அணி வலுவானது இல்லை என பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பர்கத் கான் கூறியுள்ளார்.

டாக்கா:

8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென்கொரியா, சீனா, ஓமன் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பர்கத் கான் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடர் கடினமானதாக இருக்கும். இந்திய அணி வலுவானது என்று சொல்ல முடியாது. உலக தரவரிசையில் இந்திய அணி 6-வது இடத்தில் இருந்தாலும் அது காகித அளவில் தான் வலுவானது. சமீபகாலங்களில் எங்கள் அணி கடினமான நிலையை சந்தித்து வருகிறது.

கடந்த உலக கோப்பை மற்றும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நாங்கள் தகுதி பெறவில்லை. எனவே இந்த ஆசிய போட்டியில் இருந்து எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எண்ணுகிறோம். இந்த முறை எங்களது இலக்கை அடைய விரும்புகிறோம். அதற்கு நாங்கள் ஆட்டத்தில் எல்லா துறையிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.